நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுகவின் வெற்றிக்கு அதிமுக, பாஜக மீது இருக்கும் வெறுப்புணர்வு ஒரு காரணமாக இருந்தாலும், திமுகவின் பிரச்சார யுக்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இவர்களுக்கு பின்னால் இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் ஸ்டலினின் மருமகன் சபரிசனுக்கு மிக நெருக்கமானவர்.
அவரது ஆலோசனைப்படிதான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தை ஸ்டாலின் கையில் எடுத்தார் என்றும் கூறி வருகின்றனர். இதனால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கும் பிரசாந்த் கிஷோரை திமுக தரப்பில் இருந்து அணுகியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடியும் டெல்லி சென்ற போது பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். அப்போது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் ஓபிஎஸ் இவரை அணுகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதற்கு காரணம் திமுகவிற்கு இவர் மிக நெருக்கம் என்பதால் அதிமுகவின் திட்டங்கள் தெரிந்து விடும் என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எடப்பாடி பிரசாந்த் கிஷோரை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம். இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்காக செயல்படுவது குறித்து நேற்று சென்னையில் ஆலோசனை நடைபெற்றிருக்கிறது. இப்படி தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சியினர் அனைவரும் பிரசாந்த் கிஷோரை அணுகுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.