தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தனது கூட்டணிகளையும் தொகுதிப் பங்கீடுகளையும் முடித்துவிட்டது. மேலும், வேட்பாளர்கள் பட்டியலையும் சில பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக அறிவித்தது. அதன்பிறகு, நேற்று 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மேலும், நேற்று கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களையும் அதிமுக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அதிமுகவினர் பல இடங்களில் தங்கள் தொகுதிகளில் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அவர் தங்கியிருக்கும் தி.நகர் இல்லத்தில் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு விரைவில் தொண்டர்களைச் சந்திப்பேன் என்றார். ஆனால், சில நாட்கள் கழித்து திடீரென அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். அதேபோல் அதிமுகவை கைப்பற்றுவோம் எனக் கூறிவரும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று 15 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இன்று 50 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.
முதல் கட்ட வேட்பாளரின் அமமுகவினர் எதிர்பார்த்துக் காத்திருந்த டிடிவியின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இன்று வெளியான 50 பேர் கொண்ட பட்டியலில் டிடிவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வேட்பாளராகப் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதே தொகுதியில் அதிமுகவின் சிட்டிங் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுவார் என நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவை கைப்பற்றியே தீருவோம் எனச் சொல்லிவரும் டிடிவி அக்கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடுவது அத்தொகுதியில் தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்திருக்கிறது.
ஏற்கனவே, அதிமுக அமைச்சர்கள் எந்தெந்த தொகுதிகளில் நிற்கிறார்களோ, அதே தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தி அமைச்சர்களின் டெப்பாசிட்டை காலி செய்வோம் எனத் திமுகவினர் சொல்லிவருகின்றனர். ஒருபுறம் திமுக, மறுபுறம் டிடிவி என இரண்டு பக்கமும் நெருக்கடிகள் இருப்பதனால், ஒருவித பதட்டத்தில் கடம்பூர் ராஜூ இருக்கிறார் என, அதிமுகவினர் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில், டிடிவியின் இந்த அறிவிப்பு கடம்பூர் ராஜூவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதா என அக்கட்சியினரிடம் விசாரித்தபோது, "வாக்குப்பதிவுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளது. நாங்களே எப்படி விளம்பரம் செய்யறதுனு யோசிச்சுட்டு இருந்தோம். இப்போ எங்க அண்ணன எதிர்த்து டிடிவி நின்னு எங்களுக்குச் செலவே இல்லாம விளம்பரத்தைக் கொடுத்துவிட்டார்" என்கின்றனர்.
இதுகுறித்து அமமுகவினர் சிலரிடம் கேட்டபோது, "விளம்பரமும் வெற்றியும் யாருக்குக் கிடைக்குதுனு பொறுத்திருந்து பாருங்க. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதுதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர் எங்கள் அண்ணன் டிடிவி" என்கின்றனர்.