ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சியை நம்பாமல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நம்பிதான் அங்குள்ள மக்கள் ஓட்டுப்போட்டார்களென தஞ்சையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தஞ்சை மாநகர மாவட்ட மாணவரணி அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில் "திருவாரூர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பயப்படுவதுபோல் திமுகவும் பயப்படுகிறது. நீதிமன்றத்தில் மாரிமுத்து என்பவர் மனு செய்துள்ளார் அவர் யார் என்று தெரியவில்லை. ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன், பேசுவதைப் பார்த்தால் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் பயப்படுகிறது என்பது தெரிகிறது. ஆனால், தேர்தல் நடக்கும் இடத்தில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம். கலைஞர் செயலற்று இருந்த அந்த நேரத்தில், ஆர்.கே.நகர் தேர்தல் வந்தது. கடந்த இருபது வருடங்களில் சுயேச்சை வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது. ஆனால், நாங்கள் வெற்றி பெற்றோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தான் பணம் கொடுத்தார்கள். திமுக பணம் கொடுக்கவில்லை. அவர்கள் வேண்டுமானால் அரசியலுக்காக இதுபோல் பேசலாம், திருவாரூர் தொகுதியில் உள்ள 303 வாக்கு சாவடிகளிலும் ஆட்கள் போட்டு புதியமுறையை கையாளப்போகிறோம். யாராவது பணம் கொடுத்தால் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள், அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் சரி. ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி நம்பாமல், அமமுக-வை நம்பிதான் அங்குள்ள மக்கள் ஓட்டுப் போட்டார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது மீத்தேன், ஷேல்கேஸ், போன்றவற்றிற்கு அனுமதி வழங்கவில்லை. இப்போது ஜெயலலிதா இல்லாததால் 8 வழி சாலை உள்ளிட்ட மற்ற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆகையால் ஜெயாலலிதா போன்ற தைரியமான தலைமை வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் அமமுக-வை ஆதரிக்கிறார்கள். .
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளுக்கு அடித்தளம் இல்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, போன்ற மாநிலங்களில் தேசிய கட்சிகளுக்கு அடித்தளம் உண்டு. அதனால் மக்கள் விரும்பாத திட்டங்களை அங்கு அவர்கள் கொண்டுவர முடியவில்லை. அதனால் தான் தமிழகத்தில் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனைகளை கொண்டு வருகிறார்கள்.
திருவாரூர் தொகுதியில் ஆளும்கட்சி சர்வேவில் "அமமுக தான் வெற்றி பெறும் என்று தெரிந்துகொண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கிறார்கள். தேர்தல் வேண்டாம் என்று மக்கள் எதிர்க்கவில்லை, குக்கர் கேட்டுள்ளோம் குக்கர் சின்னம்தான் எங்களுக்கு கிடைக்கும், அதில்தான் நாங்கள் போட்டியிடுவோம். பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
திருவாரூர் தொகுதியில் புயலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு இது போன்ற சமயத்தில் நிவாரண பொருட்கள் கொடுப்பதை நாங்கள் தடுக்கவில்லை. அவர்களுக்கு நிவாரண பொருட்கள் சென்றடைய வேண்டும் அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆளும் கட்சி தலையீடு இல்லாமல் அதிகாரிகள் முறையாக வழங்க வேண்டும்" என்றார்.