டெல்லி சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று (17.11.2024) ராஜினாமா செய்திருந்தார். போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணையலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது.
அதே சமயம் அமைச்சரவையிலும், கட்சியிலும் இவரது முக்கியத்துவம் குறைக்கப்பட்டதே ஆம் ஆத்மியில் இருந்து விலகலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் முன்னிலையில் கைலாஷ் கெலோட் பாஜகவில் இன்று (18.11.2024) இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த பிறகு, கைலாஷ் கெஹ்லோட் கூறுகையில், "இந்த முடிவு யாரோ ஒருவரின் அழுத்தத்தால் ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்று சிலர் நினைக்கிறார்கள்.
நான் இன்று வரை யாருடைய வற்புறுத்தினாலும் எதையும் செய்ததில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயின் அழுத்தத்தால் இது நடந்தது என்று ஒரு கதையைக் கட்டமைக்க முயற்சி நடப்பதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் இவை அனைத்தும் தவறு” எனப் பேசினார். ஆம் ஆத்மியில் ஆட்சியின் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிய இரண்டாவது அமைச்சர் கைலாஷ் கெலோட் ஆவார். இவருக்கு முன்னதாக சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுமேஷ் ஷோக்கீன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.