“என்னை விட கட்சி தான் முக்கியம். தனிமனிதனை விட இயக்கத்தை பெரிதாக நினைப்பவன் நான்” எனத் தாக்குதலுக்கு உள்ளான தனது வீடு மற்றும் காரை பார்வையிடுவதற்கு முன்பாக திருச்சி சிவா எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் நேற்று அடித்து நொறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு பிறகு பஹ்ரைன் நாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி திரும்பிய திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசியபோது, "நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவினரோடு 178 நாடுகள் கலந்துகொண்ட மாநாட்டிற்காக பஹ்ரைன் சென்று இருந்தேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சோதனைகளைச் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.
நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னை விடக் கட்சி முக்கியம். தனிமனிதனை விட இயக்கம் பெரிது; கட்சி பெரிது என்று எண்ணுபவன் நான். நடந்துள்ள இந்த நிகழ்வு மிகவும் மனவேதனையை ஏற்படுத்துகிறது. நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டுள்ளார். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் இப்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை. மனச்சோர்வில் உள்ளேன். மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை." என்றார்.