காங்கிரசில் இணைந்தபோது ராகுல்காந்தியிடம் தன்னுடைய பயோடேட்டாவை காண்பித்தவுடனே திருநாவுக்கரசர் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தான் ராகுல்காந்தி மாநில பொறுப்பு வழங்கினர்.
திருநாவுகரசர் தமிழகத்தில் தன் ஜாதி சார்ந்து செயல்பட தொடங்கிவிட்டார். அதன் அடிப்படையில் டிடிவியுடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்தி காங்கிரசுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார். பிஜேபி ஆட்களை காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகளை வாங்கி கொடுக்கிறார். திமுக ஸ்டாலினுடன் ஏற்பட்ட முரண்பாடு என தொடர்ச்சியாக கட்சிக்குள் உள்ள எதிர்கோஷ்டியின் புகாராலும், இளங்கோவன், ப.சி ஆகியோரின் தொடர் எதிர்ப்பினாலும் தலைவர் பதவியை பறிகொடுத்தார்.
ஆனாலும் ராகுல்காந்தி தற்போதைய எம்.பி. தேர்தலில் திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். திருச்சியில் காங்கிரஸ் வெற்றிபெற்று 23 வருடங்கள் ஆகிவிட்டது. திருச்சியில் உள்ளுர் ஆட்களுக்கு மண்ணின் மைந்தருக்கு கொடுங்கள் என்று லோக்கல் காங்கிரஸ் கட்சியில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அதையும் தாண்டி சீட்டு வாங்கியிருக்கிறார். காங்கிரசில் உள்ள எதிர்ப்பாளர்களை சரி செய்து அடுத்தக்கட்ட செயல்பாடுகளே அவருடைய வெற்றியை தீர்மானிக்கும் என்கிறார்கள் திருச்சி கள நிலவரத்தை அறிந்தவர்கள்.
திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடுகிறார் என்கிற அறிவிப்பு வெளியானவுடனே திருச்சியில் எம்.ஜி.ஆர். காலத்தில் மா.செ.வாக இருந்த கே.சவுந்திராஜன் சென்னையில் திருநாவுக்கரசரை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.
இதுவரை கடந்து பாதை திருநாவுக்கரசர்!
அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சு.திருநாவுக்கரசர்.
1980, 1984 தேர்தல்களிலும் இதே தொகுதியில் வென்றார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டபோது 1989-ல் இதே தொகுதியில் ஜெ. அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
அதிமுகவில் இருந்து 1991-ல் விலகியவர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து, அறந்தாங்கி தொகுதியில் குடை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
1996-ல் அதிமுக சார்பில் அறந்தாங்கியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
ஒரே தொகுதியில் தொடர்ந்து 6 முறை வென்ற ஒரே தமிழக எம்எல்ஏ என்ற அவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.
பின்னர், அதிமுகவில் இருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.
1998 எம்.பி. தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதுக்கோட்டையில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1999 எம்.பி. தேர்தலில், புதுக்கோட்டையில் திமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்ற எம்ஜிஆர் அதிமுக சார்பில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். ஜெயித்தவுடன் எம்ஜிஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். பாஜக வேட்பாளராக 2009-ல் ராமநாதபுரம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பா.ஜ.க.,வில் ம.பி., மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி.,ஆனார். பதவிக் காலம் முடிந்ததும் உடனே பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.
2014 எம்.பி.தேர்தலில் ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கடந்த தேர்தல்களில் இரட்டை இலை, சேவல், குடை, மாம்பழம், மோதிரம், தாமரை, கை என 7 சின்னங்களில் மாறிமாறி போட்டியிட்டுள்ளார். தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து திருநாவுக்கரசருக்கு திருச்சி கை சின்னம் கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.