திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும், பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.
நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது: என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.
முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.