Skip to main content

“இன்று தலைகீழாகப் புரட்டிப் போட்டு பொய் பேசுகிறார் துரைசாமி” - வைகோ பேட்டி

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

nn

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ ஆகியோர் கூட்டாக சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது பேசிய வைகோ, “திமுக ஒருபோதும் வெற்றி பெறாது. எனவே திமுகவோடு கூட்டணி வைக்கக் கூடாது என்று கட்சிக் கூட்டத்திலேயே துரைசாமி பேசினார். பிப்ரவரி மூன்றாம் தேதி 2001 ஆம் ஆண்டு அண்ணா நினைவு நாள் அன்று கூட்டம் வைத்திருந்தோம். அந்த கூட்டத்திற்கு துரைசாமி வரவில்லை. ஆனால், மற்ற அனைவரும் வந்திருந்தார்கள். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என எல்லோருமே வந்திருந்தார்கள். அங்கு பேசுகின்ற பொழுது அனைவருமே திமுகவோடு உடன்பாடு வைத்துக் கொள்வது தான் நல்லது என்ற கருத்தை வலுவாகச் சொன்னார்கள்.

 

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு திருப்பூர் துரைசாமி வந்திருந்தார். அவர் அதற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் திமுகவோடு உடன்பாடு வைத்துக் கொள்ள வேண்டும் என எல்லோரும் விரும்புவதை அறிந்து கொண்ட காரணத்தினால், ‘திமுகவோடு போகக்கூடாது; அது ஜெயிக்கவே ஜெயிக்காது; எந்தக் காரணத்தையும் முன்னிட்டு திமுகவோடு உடன்பாடு என்பது நமக்கு கூடவே கூடாது’ என்று ஓங்கிச் சொன்னார்.

 

இன்று தலைகீழாகப் புரட்டிப் போட்டு அன்று சொன்னதற்கு நேர் முரணாக திமுகவோடு கட்சியை இணைக்க வேண்டும் என அன்று சொன்னதற்கு நேர் மாறாக பொய்யான தகவலை பதிவு செய்து அது தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அன்றைய நாளில் மார்ச் ஆறாம் தேதி அன்று அவர் கையெழுத்து போட்ட அந்த ஆவணம் என்னிடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் திமுகவோடு உடன்பாடு வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அது அவருக்கு பிடிக்கவில்லை. வேலை செய்ய வேண்டாம் என்று பலர் இடத்தில் சொல்லி இருக்கிறார். ஆதாரம் எல்லாம் இருக்கிறது. இந்த சூழலில் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்