தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல், கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 19- ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று (15/03/2021) சுபமுகூர்த்த நாள் என்பதால், அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் போட்டியிட உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் அலுவலரிடம் இன்று (15/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், "எம்.எல்.ஏ. பதவி என்பது நியமனப் பதவி கிடையாது; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. வாரிசு என என்னை நினைத்தால், மக்கள் நிராகரிக்கட்டும். சிஏஏவால் பாதிப்பில்லை எனக் கூறிய முதல்வர்தான் அதைத் திரும்பப் பெற வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என சட்டப்பேரவையில் முதல்வர் பேசினார்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேட்பு மனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு, மற்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அசையும் சொத்து ரூபாய் 21.13 கோடியும், அசையா சொத்து ரூபாய் 6.54 கோடியும் உள்ளது. சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூபாய் 1.77 கோடியில் ரேஞ்ச் ரோவர் கார், தயாரிப்பு நிறுவனத்தில் ரூபாய் 7.36 கோடி முதலீடு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
2016- ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டிய சொத்து மதிப்பை விட உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.