அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா இல்லையா என்பது தொடர்பான அரசியல் பேச்சுகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தனர். ஆனால் பாஜக - அதிமுக கூட்டணி தொடரக்கூடாது என்பதுதான் அண்ணாமலையின் எண்ணமாக இருக்கிறது. எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் எப்படி பாஜக வெல்லும்; எப்படி மோடி பிரதமர் ஆவார். எனவே மீண்டும் மோடி பிரதமர் ஆகக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவரது செயல்பாடுகள் உள்ளன.
எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. பாஜக உடனான கூட்டணி முறிந்தால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அதை டெல்லி நன்றாக உணர்ந்துள்ளது. கட்டு சோற்றில் கட்டிய பெருச்சாளி போல நொய் நொய் என்கிறார். இப்பொழுதும் சொல்கிறேன் இனிமேல் ஏதாவது பேசினார் என்றால் வாங்கிக் கட்டிக் கொள்வார். எனக் கடுமையாக விமர்சித்தார்.
அதே நேரம் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தில் வாதங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பில் நடத்தப்படும் மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட முரண்கள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.