Skip to main content

‘திருமகன் ஈ.வெ.ரா’ - நொறுங்கிப் போன கலைஞரின் குருகுல இல்லம்...!

Published on 04/01/2023 | Edited on 04/01/2023

 

Tirumagan E Ve Ra..... Gurukula house of the artist is broken...!

 

தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்திருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாது தி.மு.க. உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலமான திருமகன் ஈ.வெ.ரா.வுக்கு வயது 46.

 

திராவிடர் கழகத்தின் நிறுவனர் தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். இவர் தொடக்கத்தில் திமுக, அடுத்து காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார்.  இவரின் மகன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளவர். காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மூத்த மகன் தான் திருமகன் ஈவெரா.

 

காங்கிரஸ் கட்சியில் இயங்கி வந்த திருமகன், எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ஒரு களமாக அமைந்தது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஷேரிங் மற்றும் தொகுதிகள் ஒதுக்கும் குழுவில் இருந்த இளங்கோவன், தி.மு.க. தலைமைக்கு, ஈரோடு கிழக்கு தொகுதியை வழங்குங்கள் என கோரிக்கை வைக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் குடும்பத்திற்குச் செய்வது கடமை என்ற உணர்வுடன் பெரியாரின் கொள்ளுப்பேரனான திருமகனுக்காகவே ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு வழங்கினார். 

 

2021ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டசபைக்குச் சென்றார். தொகுதியில் மக்கள் சந்திப்பு, கோரிக்கைகளை நிறைவேற்றுதல் என தொடர்ந்து பயணம் செய்து வந்தார். கட்சியினர், பொதுமக்கள் மிக எளிமையாக இவரை சந்தித்து எங்களுக்கான தேவையை நிறைவேற்றுங்கள் என உரிமையுடன் பழகி வந்தனர்.

 

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு இவருக்கு இருந்துள்ளது. இந்த நிலையில், 3ந் தேதி இரவு ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். 4ந் தேதி காலையில் வெகு நேரம் படுக்கையிலிருந்து அவர் எழவில்லை. அசைவற்று இருந்த திருமகன் ஈவெரா வை வீட்டில் இருந்தவர்கள் ஈரோடு கே.எம்.சி.ஹெச். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டில் திருமகன் ஈவெராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

 

திராவிட இயக்க அரசியல் வாழ்வில் பாரம்பரியம் கொண்ட தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவே.ரா.வுக்கு இரங்கல் தெரிவித்ததோடு கலைஞரின் குருகுல இல்லமான ஈரோட்டுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்.

 

எதையும் சமாளிக்கும் தைரியமும், துணிவும், அரசியலில் தோல்வி ஏற்பட்டு அதனால் வரும் கவலையைக் கூட நகைச்சுவை உணர்வோடு கடந்து செல்லும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று தனது மகன் மறைவால் உளவியல் ரீதியாக மன வருத்தத்தில் இருக்கிறார். அவருக்கு அத்தொகுதியினரும், ஏனைய கட்சியினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்