தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டை தொடர்ந்து கட்சி சார்பாக பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கட்சி நிர்வாகிகள் இரண்டு குழுக்களாக திரண்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குரூஸ் பர்னாந்திஸ் பிறந்தநாள் விழா அரசு விழாவாக தூத்துக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று அவருடைய 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் தமிழ் சாலையில் உள்ள குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த பாலா என்பவரின் தலைமையில் ஒரு குழுவினர், குரூஸ் பர்னாந்திஸ் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அதனை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் தலைமையில் மற்றொரு குழுவினர், அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது சிலைக்கு மாலை அணிவித்த பாலா தலைமையிலான குழுவினர், ‘மாவட்டச் செயலாளர் பாலா’ எனக் குறிப்பிட்டு கோஷம் எழுப்பினர். அஜிதா ஆக்னல் தலைமையிலான கட்சி நிர்வாகிகளை மாலை அணிவிக்க மேலே ஏறவிடாமல், பாலா தலைமையிலான குழுவினர் சிலை அருகே நின்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த, காவல்துறையினர் அங்கு வந்து, பாலா தலைமையிலான குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறங்க வைத்தனர். அதனை தொடர்ந்து, அஜிதா ஆக்னல் தலைமையிலான குழுவினர் சிலைக்கு மாலை அணிவித்த போது, மறுபுறம் ‘தூத்துக்குடியின் நிரந்தர மாவட்டச் செயலாளர் பாலா’ என அந்த குழுவினர் முழக்கமிட்டனர். அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விஜய் கட்சிக்குள், மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி இருப்பதும், அது உட்கட்சி பூசலாக மாறியிருப்பது இந்த சம்பவத்தின் மூலம் அறியமுடிகிறது.