தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பணிகள் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். நான் செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன். இனி எக்காலத்திலும் மகளிரின் வாக்குகள் திமுகவுக்கு தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் இல்லை.
தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பவருக்கே மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். மக்களவை தேர்தலில் போட்டியிட இவர்தான் இந்த தொகுதிக்கு என யாரும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை கட்சி மேலிடம் பார்த்துக்கொள்ளும். நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யாருக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பிருக்கிறதோ அவரே வேட்பாளராக இருப்பார்” எனப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.