வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி? யார் யாருக்கு இந்த உரிமைத் தொகை கொடுக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப அட்டை உள்ளவர்கள் ரேஷன் கடைகளில் நடைபெறும் முகாமில் 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். அந்த குடும்ப அட்டையில் ஒருவர் குடும்பத் தலைவியாக எடுத்துக்கொள்ளப்பட்டு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியக் கூடிய பெண்கள், சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்; ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்; ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்கள் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியற்றவர்கள். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எந்தவித தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவார். பொருளாதாரத் தகுதிகளாக ஆண்டுக்கு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில், ''திமுக கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதி நாங்கள் போராட்டம் செய்து, எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 2 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டு இருக்கிறது. அனைத்திற்கும் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது தானே. அதில் என்ன உங்களுக்கு கஷ்டம். இப்பொழுது தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கொடுப்போம் என்கிறீர்கள். அப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குபவர்கள் தகுதியுடைய குடும்பத் தலைவி, வாங்காதவங்க தகுதி இல்லாத குடும்ப தலைவியா? இது என்ன நியாயம்? தன்னார்வலர்களைக் கொண்டு தகுதியானவர்களைக் கணக்கெடுப்போம் என்கிறார்கள். அதில் சில கேட்டகிரி இருக்கு கணக்கெடுத்து கொடுப்போம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தேர்தல் நேரத்திலேயே இதை சொல்லி இருக்கலாமே. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த செக்டாரில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொடுப்போம் என்று. ஏன் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கும் கொடுப்போம் என்று சொன்னீர்கள்.
இப்பொழுது ஏன் அந்தர் பல்டி அடிக்கிறீர்கள். இன்னொரு விஷயம் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பொழுது யாருடைய மேற்பார்வையில் இது நடக்கும். எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் கொடுத்தால் எந்தவித பிரச்சனையும் இல்லை. எங்கள் ஆட்சியில் புயல் நிவாரணம், வெள்ள நிவாரணம் எல்லாம் கொடுத்தோம். எல்லாருக்கும் தான் கொடுத்தோம். இவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. தன்னார்வலர்கள் சென்றார்கள் என்றால் திமுக ஒன்றிய செயலாளர், திமுக வார்டு செயலாளர் பேச்சை கேட்டு அங்குள்ள திமுக ஆட்களுக்கு மட்டும்தான் சேர்ப்பது போன்று வரும். இதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இதில் கட்சியை பார்த்து தான் செய்வார்கள். அதனால் தான் இந்த மாதிரி தகுதிகளை இவர்கள் வரையறுத்துள்ளார்கள்'' என்றார்.