Skip to main content

“ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான்” - தொல்.திருமாவளவன்

Published on 08/12/2024 | Edited on 08/12/2024
Thol. Thirumavalavan says he was one who asked Aadhav Arjuna to participate

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம்  (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (08-12-24)  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான் தான். நீங்கள் பங்கேற்காத நிகழ்ச்சியில் நான் பங்கேற்கேலாமா? என்று ஆதவ் அர்ஜூன் என்னிடம் கேட்டார். அதை உருவாக்கியதே நீங்கள் என்கிற போது, தவிர்க்க வேண்டாம் கலந்துகொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதே நேரத்தில், கவனமாக பேசுங்கள் என்று கூறியிருந்தேன். ஆகவே, அனுமதியில்லாமல் அவர் போகவில்லை. அவரை போக வேண்டாம் என்று சொல்வதில் ஜனநாயகம் இல்லை. விசிக எளிய மக்களை அமைப்பாய் வைக்கிற ஒரு கட்சி. இதில் இத்தனை காலமும் நாங்கள் ஜனநாயகப்பூர்வமாக தான் எல்லா முடிவுகளையும் எடுத்திருக்கிறோம். 

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உண்டு; ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் ஒரு பின்னணி உண்டு. மற்ற கட்சிகளைப் போல, விசிகவும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். விசிக தொடக்கத்தில் ஒரு தலித் இயக்கம் என்ற அடையாளத்தோடு பொதுப்பணியில் ஈடுபட்டது. அரசியல் இயக்கமாக மாறாக நாங்கள் எடுத்த பல்வேறு முடிவுகளில் ஒன்று, இந்த இயக்கத்தில் தலித் அல்லாதவர்கள் ஜனநாயக சக்திகள் சேரலாம்; சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடமுண்டு என்ற ஒரு தீர்மானமே நிறைவேற்றினோம். அதை நாங்கள் வேளச்சேரி தீர்மானம் என்றே எங்கள் கட்சியில் அழைக்கிறோம். புதிதாக எல்லோரும் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம், என்று அறைகூவல் விட்டோம். 

அதில் இருந்து தலித் இல்லாத ஜனநாயக சக்திகளாக இருக்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை, தந்தை பெரியாருடைய கொள்கைகளை, மாமேதை மார்க்ஸ் சிந்தனைகளை ஏற்றுக்கொன்டவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் ஆதவ் அர்ஜூனும் ஒருவர். எங்கள் கட்சியில், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு 10 பேர் இருக்கிறார்கள். அதில் தலித் அல்லாதவர்களும் உண்டு. தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருந்தால் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவில் கலந்தாய்வு செய்து அவர்கள் மீதான நடவடிக்கைகளை ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்து தான் எடுப்போம். இதை நாங்கள் ஒரு நடைமுறையாக கொண்டிருக்கிறோம். ஏனென்றால், தலித் அல்லாதவர்கள் கட்சிக்குள் வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைமையின் பொறுப்பு. திமுக, அதிமுக, பா.ஜ.க போல் நாங்கள் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்புடையது அல்ல. நாங்கள் பேசியிருக்கிறோம், முடிவை அறிவிக்கிறோம்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்