இடதுசாரிகளின் வீழ்ச்சி இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநர் லாரி பேக்கரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘இடதுசாரிகளின் வீழ்ச்சி என்பது இந்தியாவிற்கே பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் நான் மிகத்தெளிவாக உணர்ந்தபடியால் சொல்கிறேன். நாங்கள் அரசியல் போட்டியாளர்கள்தான். ஆனால், இடதுசாரிகளின் வீழ்ச்சியை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை இங்கே உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இடதுசாரிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். சமூகம் மாற்றமடைவதைப் போலவே, மக்களின் ஆர்வமும் மாற்றமடைகிறது என்பதை அவர்கள் உணரவேண்டும்’ என பேசியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்கப்போவதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் விமர்சகர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்திருந்தனர். மேலும், திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலில் 25 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ள சூழலில், ஜெய்ராம் ரமேஷின் பேச்சு கவனிக்கத்தக்கது.