நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் அதன் கூட்டணி தலைவர்களுடன் மக்களவைத் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இன்று (11.03.2024) நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பா.ஜ.க.வுடனான இந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பெரம்பலூர் தொகுதியில் 3வது முறையாகப் போட்டியிட உள்ளேன். தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளேன். இந்திய ஜனநாயக கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதியையும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க.விடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலித்து ஆராய்ந்து வழங்குவதாக கூறியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கக் கோரியுள்ளோம். மேலும் கூடுதலாக ஒரு தொகுதியை ஒதுக்க கேட்டுள்ளோம். இது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.