விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அதிமுகவினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன. ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை. இது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியின் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமானவரித் துறையை ஏவி சோதனை நடத்தியுள்ளனர். அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சி நடத்திய அராஜகம் இது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆண்டிப்பட்டியில் அமமுக அலுவலகத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பது ஆளும் அதிமுக தோல்வி பயத்தில் எந்த வன்முறையையும் ஏவும் என்பதற்கு உதாரணமாகும்.
தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணைபோவது வெட்கக்கேடானதாகும்.
துணை முதலமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதலமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அதிமுகவினரிடம் கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.
தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி திமுக அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பாஜக மற்றும் அதிமுகவினர் நினைக்கின்றனர். தோல்வி பயம் அவர்களை நிலைகுலையச் செய்துவிட்டது. மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணப்படும்போது மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பது உறுதியாகிவிட்டது.
பாஜக - அதிமுக கூட்டணி நடத்திவரும் ஜனநாயகப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்கு இத்தேர்தலில் உரிய பாடம் புகட்ட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.