தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, தனது தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த தி.மு.க. கட்சியின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் குழுவை அமைத்து, தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (26/02/2021) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தொகுதிப் பங்கீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பொன்முடி ஆகியோருடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயகக் கட்சி வெளியேறியுள்ள நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கின்றன. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் முதற்கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.