ஆளுநர் செய்தது தவறுதான் அதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
நேற்று நடந்த தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை குறித்தான சட்ட மசோதாவை கடந்த ஆண்டு 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் நேற்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “அவசர சட்டம் பிரகடனம் செய்யும் போது ஆளுநர் அதை ஏற்றுக் கொண்டார். அதே அவசர சட்டம் சட்ட வடிவமாக வரும்போது இதில் எப்படி குறை சொல்கிறார். 234 உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்புவதே தவறு. ஆளுநர் செய்தது தவறு. அதை சொல்வதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றம் அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் அரசியல் சாசனத்தின் படி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது” எனக் கூறினார்.