Skip to main content

தேர்தல் கூட்டணி... அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்கள் வழங்கிய தேமுதிக

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

Election Coalition ...dmdk gave two options to AIADMK

 

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.

 

சட்டமன்றத் தேர்தலில் 20 வருடங்களுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுடனும், விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று (28.02.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ன் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிந்த்ரநாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது பாஜக தரப்பில் 35 க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 22 தொகுதிகளையும் கன்னியாகுமரி நாடாளுன்றத் தொகுதியையும் பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

 

இந்நிலையில் மறுபக்கம் விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் தேமுதிக அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆப்ஷன் 1: பாமாவிற்கு ஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள் வேண்டும். ஆப்ஷன் 2:  இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிமுக சார்பில் 12 தொகுதிகள் மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்