கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று (08-11-23) கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில் அவர், “தமிழக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்துவது என்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். பா.ஜ.க, திமுகவை அச்சுறுத்துவதாக நினைத்துக் கொண்டு தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், இந்துக்களின் ஆகியோரின் முதல் எதிரியே பா.ஜ.க தான். மக்களிடம் சுலபமாக இருக்கும் மத உணர்வை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் மோசமான வேலையை பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்ஸும் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க தான் இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க இல்லை, பா.ஜ.க தான் எதிர்க்கட்சி என்று காட்டிக்கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் பா.ஜ.க செய்து வருகிறது. பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வராது என்ற தைரியத்தில் அண்ணாமலை வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அண்ணாமலை, தமிழகத்தில் பல கோடி செலவு செய்யும் வகையில் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் மேற்கொள்ளும் நடைப்பயணத்தில் பா.ஜ.க.வினர் மிகவும் சொற்ப அளவில் தான் இருக்கின்றனர். அந்த பயணத்தில் அதிகமானோர் கலந்து கொள்பவர்கள் அ.தி.மு.க.வும் பா.ம.கவும் தான். இதன் மூலம் அ.தி.மு.க.வை விழுங்கும் வேலை பா.ஜ.க செய்து வருகிறது” என்று கூறினார்.