பழைய ஆட்சியில் திட்டங்களை மட்டுமே தீட்டினர் அதற்குரிய பணம் ஒதுக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆய்வு செய்தனர்.
இதன் பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் எதிர்பார்க்காத அளவில் மழை இரண்டு தினங்களாகப் பெய்து வருகிறது. காலையே முதல்வர் என்னையும் அமைச்சர் மா.சுப்ரமணியனையும் தொடர்புகொண்டு எங்கும் மழைநீர் தேங்கி இருந்தால் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு இடையூறு இல்லாமல் அதை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நான் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் இணைந்து சைதாப்பேட்டை மற்றும் அண்ணாசாலைப் பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்கிறோம். எங்கும் தண்ணீர் தேங்காத நிலைதான் உள்ளது.
சில திட்டங்கள் இந்த ஆட்சி வந்தவுடன் போடப்பட்ட திட்டங்களோ செயல்படுத்தப்பட்ட திட்டங்களோ அல்ல. அந்த ஆட்சியில் பணம் ஒதுக்கினோம் என்று சொல்லி எங்கே பணம் ஒதுக்கினார்கள். 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அரசாங்கத்திற்குக் கடன் சுமத்தி திட்டங்கள் தீட்டினார்களே ஒழிய அதற்குரிய பணத்தை ஒதுக்காமல்தான் அன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியை விட்டுப் போனார்கள். நாங்கள் வந்த பின்புதான் பலமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பணிகளை முடுக்கிவிட்டோம். மெத்தனப் போக்கிற்கு அந்தக் கட்சிதான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.