மற்றவர்கள் எப்படி அரசியல் செய்தாலும் நமக்கான அரசியல் வளர்ச்சிக்கான அரசியல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாமக வேகமாக முன்னேறி வருகிறது. சில கட்சிகள் விளம்பர அரசியல் செய்கிறார்கள். சில கட்சிகளிடம் இருந்து சத்தம் தான் வருகிறது. உள்ளே ஒன்றும் இல்லை. அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியாது. ஆனால் தினம் செய்தி வர வேண்டும் அவ்வளவுதான். நாம் அப்படி எல்லாம் இல்லை.
என்னிடம் சிலர் சொல்லுவார்கள். அவர் தினமும் எதோ பேசுகிறார். வாட்ச் காட்டுகிறார் என்று. இன்னொருத்தர் அடுக்கு மொழியில் பேசுகிறார். கைகளை காட்டி பேசுகிறார் என்று கூறுவார்கள். அதை எல்லாம் அவர்கள் செய்துவிட்டு போகட்டும். நமக்கெல்லாம் அது வராது. வரவும் வேண்டாம். தேவையும் இல்லை.
நமக்கு தெரிந்த அரசியல் எல்லாம் வளர்ச்சியை நோக்கிய அரசியல் தான். அதை நோக்கி போவோம். அங்கீகாரம் வந்து கொண்டு இருக்கிறது. உறுதியாக வரும் நம்புங்கள். நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வேறு வழி இல்லை. அந்த மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்” எனக் கூறினார்.