அதிமுகவில் பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, பின்னர் அது தொடர்பான வழக்கில் எடப்பாடி தரப்பிடம் சாவியை உயர்நீதிமன்றம் ஒப்படைத்தது.
இந்நிலையில் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமியே இந்த ஒற்றை தலைமை என்கின்ற கோஷத்தை முன்னெடுத்தார். அது உண்மையிலேயே வரவேற்கத் தகுந்த முடிவு. தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமை என்பது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால் பிரச்சனை என்னவென்றால் எடப்பாடி பழனிசாமி அந்த இடைக்கால பொதுச்செயலாளர் என்று அவரே அவரை நியமித்துக் கொண்டது அல்லது அவரால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களால் வைத்து நியமித்துக் கொண்டது என்பது தவறு. இதே தவறைதான் சசிகலா செய்தார். அன்று அது தவறு என்று வாதிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அதே தவறை தான் செய்திருக்கிறார்.
அப்பொழுது ஒரு அடிப்படை தொண்டன் கூட தலைமைக்கு வரலாம் என்கிறார்கள். 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று கூறுகிறார்கள். எடப்பாடி ஒரு கிளைச் செயலாளராக இருந்து பொதுச்செயலாளராக ஆகி இருக்கிறார் என்றால், இப்பொழுது எந்த கிளை செயலாளருக்கு 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிவார்கள், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிவார்கள். எடப்பாடி பழனிசாமி குறைந்தது ஒரு மாவட்டச் செயலாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பார். அப்போ 20 கோடி ரூபாய் கொடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்ய எந்த மாவட்டச் செயலாளரால் முடியும்.
இன்றைக்கு பார்த்தால் எடப்பாடி பழனிசாமி தான் சார்ந்த சமுதாயம் அதை மட்டும் கட்டமைத்தால் போதும் என நினைக்கிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் போன்றவர்கள் அவர்களைச் சார்ந்த சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கே.பி.முனுசாமி அவர் சார்ந்த சமுதாயத்தை கட்டமைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்போது இவர்கள் எல்லாருமே இன்னொரு ராமதாஸ் ஆக முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் எம்ஜிஆர் வழியில், ஜெயலலிதா வழியில் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தொண்டர்களால் ஒரு தலைமை உருவாக்கப்பட்டு அந்த தலைமையால் வழிநடத்தப்பட வேண்டும் என்கின்ற முடிவில் இவர்கள் இல்லை'' என்றார்.