2024 நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பல்வேறு கட்சியினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில முதலமைச்சருமான நித்திஷ் குமார், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பீகார் முதல்வரும் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நித்திஷ் குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது. எதிர்க்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையை வளர்த்துக்கொண்டு முன்னேறுவோம். நாட்டுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். கொள்கை ரீதியான போரில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதலை ஒற்றுமையுடன் எதிர்த்துப் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
அதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “எங்களால் முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து செயல்பட முயற்சிப்போம்” என்று தெரிவித்தார். மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “இது வரலாற்று சந்திப்பு” என்று தெரிவித்தார்.