கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் துணைப் பொதுச்செயலாளராக திமுக எம்பி கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''முதல்வர் நம் மீது நம்பிக்கை வைத்து ஒரு பொறுப்பை தந்து இருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நிச்சயமாக அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக ஈடுசெய்யக் கூடிய அளவிற்கு என்னுடைய பணிகள் இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு இந்த வாய்ப்பை அளிப்பதற்கு காரணமாக இருந்த தூத்துக்குடி மக்களுடைய அன்பு, என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அது மட்டும் இல்லாமல் திமுகவில் இருக்கக்கூடிய மூத்த முன்னோடிகள், முன்னணி தலைவர்கள், ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கக்கூடிய கழகத்தின் உடன்பிறப்புகள், பொறுப்பில் இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு வாழ்க்கை முறைகள், பல்வேறு மொழிகள் அத்தனையும் இணைந்தது தான் இந்தியா. ஒரு மொழியை எல்லோரும் பேச வேண்டும் என்று திணிக்க கூடிய அந்த ஒரு நிலையை உருவாக்குவது, எல்லா அதிகாரிகளும் அந்த மொழியை தான் பயன்படுத்த வேண்டும், எல்லா பணிகளுக்கும் எழுதக்கூடிய கடிதங்களும் அந்த மொழியில் தான் எழுதப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும்பொழுது நிச்சயமாக மக்களுடைய மனதில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வுதான் தழைத்தோங்கி எழும். அவர்கள் மீண்டும் மீண்டும் இந்தி பிரச்சனையை கொண்டு வர முயல்வது அவர்கள் செயல்படாமல் இருப்பதை திசை திருப்புவதற்காக தான் என்று நமக்கு தோன்றக்கூடிய அளவிலே மறுபடியும் மறுபடியும் இந்த பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்'' என்றார்.