கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.மேலும் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யார் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் வாக்காளர்கள் மத்தியிலும்,அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக அதிமுகவிடம் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் பாமக திமுகவிடம் தான் கூட்டணி குறித்து பேசியதாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அதனால் அவர்களை கூட்டணியில் சேர்க்கவிட்டால் அதிமுகவிடம் கூட்டணிக்கு செல்வார்கள் அதனால் அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் மக்கள் அதிருப்தியில் திமுகவிற்கு பலம் சேரும் என்பதாலேயே ஸ்டாலின் இந்த ராஜதந்திர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில நாட்களாக திமுக பாஜகவிடம் பேசியது,மூன்றாவது அணி அமைக்க விரும்பும் சந்திரசேகரராவிடம் பேசியது என்று பெரும் விவாதத்தை அரசியல் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூவ் எல்லாமே ஸ்டாலின் தனது அரசியல் இமேஜை இந்திய அளவில் உயர்த்துவர்க்காக எடுக்கப்பட்டது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி இருக்கும் நிலையில் ஸ்டாலின், திமுக,காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி தான் அடுத்து இந்தியாவின் பிரதமர் என்றும் அறிவித்தார்.மேலும் மற்ற மாநிலத்தில் பாஜக அல்லாத கூட்டணியில் இருப்பவர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஏற்கனவே ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியதால், தேர்தல் முடிவுக்கு பின் மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பன்மை இல்லாமல் ஆட்சியை அமைக்க மாநில கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாடு வந்தால் மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்யும் அப்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று அறியவே இப்படியான அரசியல் மூவ்கள் நடப்பதாகவும் அதை ஸ்டாலின் சிறப்பாக கையாளுகிறார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.