வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் மக்களுக்கு பயன் தரும் திட்டம் அல்ல என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ''சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் பொழுது, உள்ளபடியே எங்களுக்கெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மக்கள் வெள்ளம் கூடி அவரை வரவேற்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இதனையெல்லாம் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிசாமி பேட்டி என்ற பெயரால் இல்லாததையும் பொல்லாததையும் செய்திருக்கிறார். நான் ஒன்றை தெளிவாக எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கிறேன். திமுக ஆட்சி வந்த பிறகு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும் கைவிடவில்லை. எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள் என்று. இதற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அந்த இடத்திற்கு பின்னால் ஒரு ரகசியமே இருக்கிறது. அங்கே ஏன் பேருந்து நிலையத்தை கொண்டுசென்றார்கள். அது மக்களுக்கு பயன் தரும் இடமே அல்ல. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானவர்கள் அந்த இடத்தை வளைத்துப்போட்டு, வேலுமணியின் குடும்பத்தாருக்கே நிலம் சொந்தம் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அங்கு போய் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னார்களே ஒழிய, அதற்கு எடப்பாடி அரசு நிதி ஒதுக்கியதா? அங்கு பேருந்து நிலையம் அமைக்க 61 ஏக்கர் தேவை. ஆனால் இவர்கள் கையகப்படுத்தி இருப்பதோ 50 ஏக்கர். மேலும் கோவை மாநகர மக்களே அங்கு பேருந்து நிலையம் அமைய விரும்பவில்லை. காரணம் பல்லடம் சாலையிலிருந்து அங்கு செல்ல 8 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்லவேண்டும். இதெல்லாம் மக்களுக்கு பயன்தரக்கூடியது அல்ல'' என்றார்.