கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் இருந்தன. இந்நிலையில், 11 ஆம் தேதி (நேற்று) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 136 இடங்களிலும், பாஜக 65 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 136 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் கர்நாடகத்தில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “கர்நாடகத் தேர்தலில் மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாமல் சென்றதற்கான காரணத்தை நிச்சயமாக கட்சி ஆராயும். மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய வகையில் அதற்கான செயல்திட்டங்களை வரும் காலங்களில் கட்சி நிச்சயம் உருவாக்கும். பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறதோ அதையெல்லாம் பூரணமாக நிறைவேற்றும் வகையில் மக்களுடையே நெருக்கமான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கும் கூட கர்நாடகத் தேர்தல் முடிவு அமைந்துள்ளதாக நாங்கள் பார்க்கிறோம். தோல்விக்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். வெற்றி பெற்ற கட்சி ஒன்று சொல்லும். தோல்வி அடைந்த கட்சி ஒன்று சொல்லும்.
ஒரு குறிப்பிட்ட காரணத்தை யாராலும் சொல்ல முடியாது. திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக நீக்கப்பட்டுவிட்டது என முதலமைச்சர் சொல்லியுள்ளார். அவர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார். ஒருமுறை தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டால் அந்த மாநிலத்தில் இருந்து அந்த கட்சி துடைத்தெறியப்படும் என்றால் திமுக தமிழ்நாட்டில் இருந்து எத்தனை முறை துடைத்தெறியப்படும். கர்நாடகத்திலும் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவிற்கு தான் மக்கள் வாய்ப்பளித்துள்ளார்கள். திராவிட நிலப்பரப்பு என்பதை இவரைத் தவிர மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒத்துக்கொள்ளாதபோது, அலங்காரத்திற்காக சொல்லி சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். அண்ணாமலை கர்நாடகத் தேர்தலில் அவரது பங்கினை மிகச்சிறப்பாக செய்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
அண்ணாமலையின் தனிப்பட்ட தவறுகளோ பங்களிப்பு இல்லாமையோ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஒட்டுமொத்த கட்சியும் சேர்ந்து அளித்த பங்களிப்பு போல் முடிவுகளையும் ஒட்டு மொத்த கட்சியும் ஏற்கிறது. பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத் தோல்வி என்பது எங்களுக்கு பிரச்சனையாக இருக்காது. நான் எதையும் கற்பனையாக சொல்லவில்லை. கடந்த முறை கூட ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. ஆனால் 6 மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வந்தபோது முழுமையாக பாஜகவின் எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். அதுபோல் மீண்டும் பாஜகவிற்கே மக்கள் வாய்ப்பளிப்பார்கள்” எனக் கூறினார்.