‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ எனும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வரும் தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை மணப்பாறை பகுதியில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நடத்திவருகிறார்.
திருச்சி மாநகர பகுதிக்குள் டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் செய்து பேசிய உதயநிதி, “நீண்ட நேரம் காக்க வைத்ததற்காக மன்னிக்கவும் வரும் வழிகளையெல்லாம் 15 இடங்களில் திட்டமிட்டோம். ஆனால், பல இடங்களில் வண்டியை நிறுத்தி பேசிவிட்டுதான் போக வேண்டும் என்ற ஆசையோடு கேட்டதினால் இந்த கால தாமதம் ஏற்பட்டது.
கலைஞர் வீட்டு வாசலில் ஆரம்பித்து இன்று 16வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறேன். முதல் மூன்று நாளும் தொடர்ந்து கைது செய்து வந்தனர். அதிலும் காவல்துறை மிகுந்த பாசத்தோடு இருந்தாங்க.
யாரைக் கைது செய்தாலும் அவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிடுவாங்க. ஆனா, நீங்க பிரச்சாரத்துக்கு போறீங்க என்று காவல்துறை கூறுகிறார்கள்” என்று கிண்டலாகப் பேசினார்.
மேலும் அவர், “நான் எங்கு சென்றாலும் வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறேன் என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் ஓட ஓட விரட்டியது மக்களாகிய நீங்கள், ஓடியது அவர்கள். ஆனால், என் மீது வழக்குப் போட்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நேயர் விருப்பம்போல் ஆகிவிட்டார். எடப்பாடி பழனிசாமிக்கு செல்ல பெயர்கள் அதிகம். எடுபுடி பழனிச்சாமி, மோடிக்கு எடுபுடி என்ற செல்லப் பெயரும் சொல்லலாம். சசிகலா காலைபிடித்து முதலமைச்சர் ஆன கதை எல்லாருக்கும் தெரியும்.
எடப்பாடி பழனிசாமி, ஒரு மிகப் பெரிய ஊழலை செய்திருக்கிறார். சாலை ஒப்பந்தம் விட்டதில் 6,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் 800 கோடி ரூபாய் பணத்தைப் பெற்ற உடனே அவருடைய உடலை இறுதி சடங்கிற்காக கொடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. என்றால் அண்ணா தி.மு.க. அல்ல அடிமை தி.மு.க.
மோடி, டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுகிறார். 10,000 கோடி ரூபாய் செலவில் கட்டுகிறார்கள். மேலும் மோடி இரண்டு சொகுசு விமானங்கள் புதிதாக 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்கி உள்ளார்.
கரோனாவில் நடந்த ஒரே ஒரு நல்ல காரியம் மோடியோட தாடி வளர்ந்ததுதான். அந்த தாடியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நான் வரும் டிரெய்லர் தான், மெயின் பிக்சர் விரைவில் வருவார்.
ஜெயலலிதா இறந்துட்டாங்க அவங்க இறந்தது குறித்த பல தகவல்களை வெளியாகாத நிலையில், தற்போது ரூ.90 கோடி பில் போட்டது அப்பல்லோ மருத்துவமனை. அதுவும் ஒரு இட்லி கோடி ரூபாய். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தும் வெளியே கொண்டு வரப்படும்.
‘மோடி தான் எங்களுடைய டேடி, அம்மான்னா சும்மா’ என்று தற்போதைய ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர் கூறுகிறார். எப்படி ரயில்வே துறையில், விமானத் துறையில் தனியார்மயம் மாறியதோ அதேபோல்தான், இந்த விவசாயத்தையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதனுடைய முதல் வெளிப்பாடுதான் இந்த வேளாண் சட்டங்கள்.
இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று பலர் கூறுகின்றனர். ஆனால் பல லட்சம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 35 விவசாயிகள் பலியாகி உள்ளனர். இந்த நீட் தேர்வால் மருத்துவராக முடியாமல் இதுவரை மொத்தம் 15 மாணவர்கள் இறந்திருக்கிறார்கள். இது ஒரு கட்டாய திணிப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும்கூட நீட்தேர்வு தமிழகத்துக்குள் நுழைய முடியவில்லை. ஆனால், தற்போதைய அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு உள்ளே அனுமதித்து விட்டனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தினை இரண்டாக உடைத்து பிரித்து அதில் ஒரு பாதியை மத்திய அரசுக்கு ஒதுக்கிக் கொடுத்தது. இப்படி, தொடர்ந்து எல்லாவற்றிலும் கொள்ளையடித்து வருகிறது. எடப்பாடி ஆட்சியில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மத்திய அரசையும் அகற்ற வேண்டும்.
மே மாதம் கண்டிப்பாக தேர்தல் வரும் 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கண்டிப்பாக ஜெயிக்கும்.
ஜனவரி 27ஆம் தேதி சசிகலா வெளியில் வருகிறார். வெளியே வந்தவுடன் முதல் வேலை எடப்பாடிக்கு ஆப்புதான். அம்மா சும்மா விடுவாங்களா ஆப்பு அடிக்காம விட மாட்டாங்க அப்ப எடப்பாடி காலில் விழுந்து விடுவார்” என்று பேசினார்.