அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி நடக்கவிருக்க நிலையில், கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செ.க்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் இரட்டை தலைமை குறித்தான விவாதம் எழுந்து தற்போது அதிமுகவினுள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ்-க்கு ஆதரவாக ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகின்றன. அதிலும், ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் அதிகளவில் இருந்தன. இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, கடந்த 14ஆம் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தேனி மாவட்டச் செயலாளரும், ஒ.பி.எஸ்சின் ஆதரவாளருமான சைதுகான் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக பல மாவட்டச் செயலாளர்கள் குரல் கொடுத்தும்கூட, சொந்த மாவட்டமான தேனி மாவட்டச் செயலாளர் சையதுகான் ஓபிஎஸ்க்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருந்தார்.
அதேசமயம், இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விஷயம் ஓபிஎஸ் காதுக்கு எட்டவே, உடனே தனது மகன் எம்.பி. ரவிந்திரநாத் மூலமாக மாவட்ட நிர்வாகிகளை செல்போன் மூலமாகவும், நேரிலும் சந்தித்து தனக்கு ஆதரவான போஸ்ட்டர்களை அடிக்க சொன்னார். அதன் பிறகே மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே "ஜெ மூலம் அடையாளம் காட்டப்பட்ட தொண்டர்களின் பாதுகாவலர் ஓபிஎஸ்.. ஒற்றை தலைமை ஏற்கவா, உயிர் உள்ளவரை ஒரே தலைவர் ஓபிஎஸ்" என பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், சின்னமனூர், ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்களை ஒட்டி ஒரு பெரும் எழுச்சி இருப்பதுபோல் காட்டிவிட்டார்கள் என்கின்றனர் தேனி மாவட்ட அதிமுகவினர்.
ஓ.பி.எஸ் மூலம் அடையாளம் காட்டப்பட்ட மாவட்டச் செயலாளரான சையதுகான், தொடர்ந்து ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு கொடுத்துக்கொண்டும், சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்றுகூட குரல் கொடுத்துவந்தவர். ஆனால், திடீரென இ.பி.எஸ். பக்கம் சாய்ந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.