![thamimun ansari](http://image.nakkheeran.in/cdn/farfuture/g-0W73UUAV9YTK1BizQ1FdT76gTASuBNssUrMIDNko4/1538321594/sites/default/files/inline-images/thamimun%20ansari_3.jpg)
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பாடி 87வது வட்ட மஜக செயலாளர் ஜெய்லானி புகாரி அவர்களின் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் உதயகுமார், எச். ராஜாவை உயர்வாக ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசியது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்தவர், இது அமைச்சரின் கருத்தா? அதிமுகவின் கருத்தா? என்பதை அதிமுக தலைமை தெரிவுப்படுத்த வேண்டும் என்றார்.
கருணாஸ் தன் மீது அடுத்தடுத்து பொய் வழக்குகள் புனையப்படுவதாக குற்றம் சாட்டுகிறாரே?
கருணாஸ், தான் தவறாக பேசியதற்கு இரண்டு முறை ஊடகங்களில் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். அதன் பிறகு அவர் சிறையிலும் தள்ளப்பட்டு விட்டார். மேலும் அவர் மீது வழக்குகளை தொடுப்பது நியாயமில்லை. யாரும் எல்லைகளை மீறக்கூடாது.
அதே சமயம் பெரியாரையும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கொச்சைப்படுத்தி பேசிய எச். ராஜாவ மீதும், பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தி பேசிய எஸ்.வி. சேகர் மீதும் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? நாடெங்கிலும் இதைத் தான் மக்கள் கேட்கிறார்கள். எனவே தமிழக அரசு இதில் கவனமெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இனி வரும்ம் தேர்தல்களில், பாஜக இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என எஸ்.வி.சேகர் கூறியிருக்கிறாரே?
அவர் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர். இப்போதெல்லாம் அவரது நாடகங்கள் நடைபெறுவதில்லை. அவரது கருத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.
மேலும் பேசிய தமிமுன் அன்சாரி, செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தின் மீது காவி அமைப்புகளை சேர்ந்தவர்களே, கலவரம் உருவாக்கி பழியை சிறுபான்மையினர் மீது போடும் நோக்கோடு, ஊர்வலத்தில் கல்லெறிந்த செய்தி வெளிவந்திருப்பது அதிர்ச்சி யளிப்பதாகவும், இவ்விஷயத்தில் அப்பாவிகளை விடுதலை செய்து, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று நிறைவடைகிறது. அதை முன்னிட்டு ஆயுள் தண்டணை கைதிகள் இதுவரை 900 க்கும் மேற்பட்டோர் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பராபட்சம் இருக்கிறது. இதில் அரசியல், சமூக வழக்குகள் என பேதம் பார்க்காமல் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.