அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் நான்காவது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த ஆலோசனையில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல இவ்விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று நடத்திய ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் மோகன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., மு.தம்பிதுரை எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 14ம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்த பின், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடுமையான வார்த்தை மோதல்களும் நிகழ்ந்து வருகின்றன. அதேநேரம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் தொண்டர்களை அமைதிகாக்க வலியுறுத்திவிட்டு, முக்கிய தலைவர்களோடு தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், நேற்று இ.பி.எஸ் உடன் ஆலோசனையில் பங்கேற்ற தம்பிதுரை இன்று காலை 11.00 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
வருகிற 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இவ்விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தோடு தம்பிதுரை உள்ளிட்ட சில முக்கிய அதிமுக தலைவர்கள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் இப்படியே நீடித்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என்பதோடு, கட்சியின் பலம் குறைந்து மற்ற கூட்டணிக் கட்சிகள் பலமடைய வாய்ப்பாகிவிடும் என்பதும் இந்த சமாதான முயற்சிகளுக்கு முக்கிய காரணமாம்.