தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரையடுத்த காசிதர்மம் கிராமத்தில் சக்திவேல் (45) என்பவர், சவுதி அரேபியாவின் ரியாத்தில் செயல்படும் கம்பெனி ஒன்றில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தச்சு வேலை பார்த்து வந்தார். அடிப்படையில் அடித்தட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சக்திவேல். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவரது உயிர் பிரிந்தது. தகவலறிந்த தொகுதியான கடையநல்லூர் எம்.எல்.ஏ. முகம்மது அபுபக்கர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு உடலை அங்கிருந்து மீட்டு வந்து அடக்கம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டார் எம்.எல்.ஏ. இதற்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பான சவுதியின் அரேபியா காயிதே மில்லத் பேரவையின் தலைவர் நாசரை தொடர்பு கொண்டு பணிகளை விரைவுபடுத்தினார்.
அதன்பின் அந்நாட்டின் இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ஜமால் சேட்டிடம் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ, சக்திவேல் பணியாற்றிய கம்பெனி அவருக்குரிய செட்டில்மெண்ட் முடித்தபிறகு, காசிதர்மத்தில் நோட்டரி பப்ளிக் வக்கீலிடம் அடக்கம் செய்வதற்கான அனுமதி சான்றிதழ் பெற்ற பிறகு உடல் அடக்கம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகக் குடும்பத்தாரிடம் தெரிவித்தார் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. அதோடு ஆதரவற்ற சக்திவேலுவின் பிள்ளைகளான ஹாரிணி (13) பூபாலன் (5) இருவரின் கல்விக்கான முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டார் எம்.எல்.ஏ. இதில் எம்.எல்.ஏ.வுடன் தொகுதியின் முக்கிய நபர்கள் வந்திருந்தனர்.