அதிமுக பொதுக்குழு தொடர்பான தீர்ப்புக்கு பிறகு மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஓபிஎஸ், அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட பகிரங்க அழைப்பு விடுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அந்த அழைப்பை நிராகரித்ததோடு, தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் புகழேந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''எங்ககிட்ட ஒரு பிசாசு இருந்தது. அந்த பிசாசு பேரு கே.பி.முனுசாமி, அந்த பிசாசு இந்த முகாமில் இருந்து ஷிஃப்ட் ஆகி அங்கு போயிடுச்சு. ஓபிஎஸ் விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து அரசியல் செய்தார் என்றால் அதற்கு காரணம் கே.பி.முனுசாமிதான். நேற்று கே.பி.முனுசாமி சொல்கிறார் ஓபிஎஸ்-க்கு உரிமை இல்லை என்று. அவருக்கு உரிமை இல்லாமல் யாருக்கு உரிமை இருக்கிறது. பொன்னையனை வா வா என்று அழைக்கிறேன். லேட் ஆகிட்டே இருக்கு. விரைவில் வந்திடுவார். பொன்னையன் இந்த பக்கம் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அவர் எல்லா உண்மையையும் சொல்லிட்டார். குடிகாரன் என்று அவர்தான் சொன்னாரு, சண்முகத்திற்கு 18 எம்.எல்.ஏனு அவர்தான் சொன்னாரு, எடப்பாடி பழனிசாமிகிட்ட 9 எம்.எல்.ஏனு சொன்னாரு, அதுல முனுசாமியும் இருக்கிறார்.
அரசியல் பச்சோந்தி என்றால் அது முனுசாமிதான். ஓபிஎஸ் இதுவரை யாரையாவது சிங்கிள் லைன் தப்பா பேசியிருக்காரா?. தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமா வந்தாலும் கொக்கரிக்காமல் வாங்க அனைவரும் ஒன்றாய் சேர்ந்து செல்லலாம், சண்டை வேண்டாம் என்று சொன்னாரு. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறு அறிவு இல்லை. ஐந்தரை அறிவுதான் ஆரம்பத்தில் இருந்தே. இது சசிகலா செய்த வேலை எங்கோ இருந்த ஆளை மேலேதட்டிவிட்டுட்டாங்க. அப்போவெல்லாம் ஜெயலலிதா குரூப் போட்டோவில் பாருங்க ஒரு மூளைல நின்னுட்டு இருப்பாங்க. ஜெயில்ல 'எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து நான் தப்பு பண்ணிட்டேன் புகழேந்தினு' என்னிடம் ஒத்துக்கொண்டார்கள் சசிகலா. என்னைக்கும் அதை அவர்கள் மாற்றி பேசமாட்டாங்க, நானும் மாற்றி பேசமாட்டேன். அங்குதான் அரசியல் மாறி ஒரு துரோகியின் கைக்கு கட்சி சென்றுவிட்டது'' என்றார்.