

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அகமது படேல் மறைவுக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளர் அகமது படேல் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறோம்.
5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேசிய அரசியலில் வலம் வந்த அவர், காங்கிரஸ் கட்சியின் சக்தி மிக ஆளுமையாக திகழ்ந்தவர். தேசிய அளவில் கூட்டணிகளை அமைத்து கொடுப்பதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார். ராஜீவ்காந்தி அவர்களின் குடும்பத்திற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சிலரில் இவர் முதன்மையானவராக இருந்தார்.
குஜராத்தின் கள அரசியல் வழியே உருவான கதர் சட்டை தேசியவாதியான இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கும், குஜராத்திகளுக்கும் ஆழ்ந்த வேதனைத் தரக்கூடியதாகும். அவரை இழந்து வாடும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்'' என கூறியுள்ளார்.