Published on 14/09/2019 | Edited on 14/09/2019
செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்ற நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் அடுத்த தலைவருக்கான போட்டியில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் ஆகியோரின் பெயர்களை கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக செய்தியாளர்களிடம் பேசிய போது, பா.ஜனதாவில் சேரும்படி நடிகர் ரஜினிகாந்தை நாங்கள் அழைக்கவில்லை. பா.ஜனதாவில் சேர அவர் விருப்பம் தெரிவித்தால் வரவேற்போம் என்று கூறினார். தமிழக பாஜகவின் புதிய தலைவரை இரண்டு மாதங்களில் நியமிக்க வேண்டும் என்று நினைத்துள்ளோம். ஆனால் 10 அல்லது 15 நாட்களில் கூட அறிவிக்கப்படலாம். நிச்சயமாக சாதி அடிப்படையில் பாஜகவின் தலைவர் தேர்வு இருக்காது என்றும் கூறியுள்ளார்.