தேர்தல் பிரச்சாரம், மக்களின் கருப்புக் கொடி போராட்டம் என்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது நாங்குநேரி இடைத்தேர்தல். தொகுதிவாசிக்கே வேட்பாளர் வாய்ப்புத் தரவேண்டும் என்று ஒதுங்கி நின்ற காங். முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, தமிழரசன் உள்ளிட்ட அவர்களது ஆதரவாளர்களைச் சமாளிப்பதற்காக நாங்குநேரி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியோ அவர்களிடம் போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. உறவுகளும் அப்படிதான் வேட்பாளர் என்று வரும் போது நமக்கு கட்சிதான் முக்கியம். விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அவர்களை சமாதானப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய வகையில், ஊக்கப்படுத்திய பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவனின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக பரப்புரையை மேற்கொண்டனர்.
அ.தி.மு.க.வின் வேட்பாளரான நாராயணன் அய்யாவழி பக்தர். தொகுதியிலிருக்கும் 61,539 இந்து நாடார் பிரிவு மக்களின் வாக்குகளைக் குறி வைத்திருக்கிறார். ஆனால் அய்யாவழி பக்தர்கள் அனைத்து சமூகத்திலும் உள்ளனர். அது கை கொடுக்குமா என்பது கேள்விக்கான விஷயம். இதனிடையே அ.தி.மு.க. அமைச்சர்களான ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்கள் களக்காடு மற்றும் நாங்குநேரி யூனியன் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பூத் கமிட்டியினரை விரைவுப்படுத்தும் பணியில் தீவிரமாகியுள்ளனர்.
அதே சமயம், நெல்லை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம் நாங்குநேரி பல கிராமங்களைக் கொண்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று ஒதுங்கியிருப்பதால், அந்த வழியாக நாள்தோறும் செல்கிற 96 அரசுப் பேருந்துகளில் 16 அரசுப் பேருந்துகள் மட்டுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து போவதால் போக்குவரத்து சிரமம். பல மாதங்களாக நாங்குநேரி மக்கள் கோரிக்கை வைத்தும், அது தீர்க்கப்படாததால் தற்போதைய சூழலில் நாங்குநேரி, மாவடி, மற்றும் மூலக்கரைப்பட்டி மகுதிமக்கள் தங்களின் ஊர்களில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேர்தல் புறக்கணிப்பல்ல, எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த நோட்டாவுக்கே வாக்களிப்போம் என்று சொன்னதால் அவர்களை அமைச்சர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். போராட்டம். பிரச்சாரமுமாய் கலந்து கலகலப்பாகிறது நாங்குநேரி இடைத்தேர்தல்.