இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''போராட்டங்கள் என்பதை அரசியல் நடவடிக்கையாகக் கருத முடியாது. தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையைக் கேட்கலாம். எந்த ஒரு கோரிக்கையையுமே அரசு 100% முடித்துவிட முடியாது. வாராக்கடன் விஷயத்தில் நாங்கள் சொல்வது என்னவென்றால் ஏன் ஏழைகளுக்குக் கொடுக்காமல் செல்வந்தர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றுதான் கேட்கின்றோம். இந்த அரசைப் பொறுத்தவரை கூட்டணி என்பதற்காகச் சொல்லவில்லை எதிர்க்கட்சியாக இருந்தால்கூட இந்த ஒன்றரை வருடத்தில் இந்த அரசினுடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் அதைத் திருத்திக் கொள்கிறார். எனவே தொழிற்சங்கங்களுடைய கோரிக்கைகளை முதல்வர் பரிசீலிப்பார் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கறவை மாடு வைத்திருப்பவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள். கறவை மாட்டை யார் வைத்துள்ளார்கள் தமிழ்நாட்டில், டிவிஎஸ் கம்பெனியோ அல்லது மிகப்பெரிய ஆட்களா வைத்திருக்கிறார்கள். இல்லை ஏழை மக்கள் விவசாயிகள் வைத்திருக்கிறார்கள். புண்ணாக்கு விலை ஏறி இருக்கிறது தவிடு விலை ஏறி இருக்கிறது. அப்பொழுது கொள்முதல் விலையை ஏற்ற வேண்டும் என பால் சங்கங்கள் கேட்கிறார்கள். அதற்கு கொடுக்கும்பொழுது ஆவின் பால் விலையும் ஏறத்தான் செய்யும். சில விஷயங்களை மார்க்கெட்தான் முடிவு செய்கிறது. லிப்ரலைசேஷன் என்ற பொருளாதார தத்துவத்தின் சிறப்பே ஒரு விலையேற்றம் அல்லது விலை குறைவு என்பது மார்க்கெட்தான் முடிவு செய்யும். வரி போட்டு பால் விலை ஏற்றியிருந்தால்தான் அரசின் மீது தவறு. கொள்முதலுக்காகக் கொடுத்திருந்தால் அது தவறில்லை. ஏனென்றால் அந்தப் பணம் விவசாயிகளுக்குப் போகிறது'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'புதுச்சேரியில் பாஜக துணையோடுதான் ஆட்சியில் அமர்ந்தோம். ஆனால் ஆட்சி நடத்த முடியவில்லை. மக்கள் சேவை செய்ய முடியவில்லை' என புதுச்சேரி முதல்வர் வேதனை தெரிவித்துள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, ''அதைவிட வேதனை என்ன தெரியுமா அவரை சுதந்திரமாகப் பேச நாங்கள் அனுமதித்திருக்கிறோம் என தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார். ஒரு முதலமைச்சர் ஒரு கருத்தை சொல்வதற்கே நாங்கள் அனுமதித்ததால் அவர் சொல்கிறார் என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய சர்வாதிகாரம். தமிழிசை சௌந்தரராஜன் இப்படிச் சொன்னால் மோடி வாய் திறந்தால் எப்படி இருக்கும். அதுதான் பாண்டிச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது'' என்றார்.