
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. அதே சமயம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜே.சி.டி.பிரபாகர், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு வில் இருந்து இருந்து வெளியேறுகிறேன். மேலும் புகழேந்தி, கே.சி. பழனிசாமியுடன் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடங்க உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். முன்னதாக திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா?. இல்லை ஒன்றுபட்ட அதிமுக என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியைக் களமிறக்கி 2019 இல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது. எனவே, கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ எனச் சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வதினும் கட்சியைக் காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.