
பாஜக குறித்து பொன்னையன் கூறியது அவரது சொந்த கருத்து என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக பேட்டியளித்தனர். அப்பொழுது பேசிய இபிஎஸ் ''அதிமுகவால் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அதிமுக சார்பாகவும், எனது சார்பாகவும் அண்ணன்( ஓபிஎஸ்) சார்பாகவும் நன்றி'' என்றார்.
அப்பொழுது ஓபிஎஸ், ''சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சிகளுக்கும் நன்றி'னு சொல்லுங்க'' என எடப்பாடி பழனிசாமியிடம் சொல்ல, அவர்களது வெற்றிக்கு துணை நின்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாமகவினருக்கும் நன்றி'' என்றார் எடப்பாடி பழனிசாமி.
66 எம்எல்ஏக்களை கொண்ட அதிமுக எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை. நான்கு எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகதான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என பாஜகவின் வி.பி.துரைசாமியின் கூறியுள்ளாரே? என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் பிரச்னையை எந்த அளவு புள்ளி விவரத்தோடு சட்டமன்றத்திற்கு கொண்டு செல்கிறோம் என மக்களுக்கு தெரியும். போலீசாரின் உதவியால்தான் குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. இதுதான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கின் தற்போதைய நிலை. தமிழகத்தில் கொலை நிகழாத நாளே கிடையாது. வழிப்பறி திருட்டு, கட்டபஞ்சாயத்து, ஜெயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதையெல்லாம் தட்டிக்கேட்க அருகதை இல்லாத அரசாகவே திமுக உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை'' என்றார்.
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், அதிமுகவை பாஜக பின்னுக்கு தள்ளப்படுவதை குறித்து வேதனை தெரிவிக்கும் காணொளி அண்மையில் வெளியாகி இருந்த நிலையில் அந்த கருத்து பொன்னையனின் சொந்த கருத்து என ஓபிஎஸ் தெரிவித்தார்.