Published on 06/05/2020 | Edited on 06/05/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரோனா பாதிப்பு கட்டுக்குள் அடங்காமல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், மதுக்கடைகளை திறப்பதில் பழனிசாமி அரசு தீவிரம் காட்டுவது அவர்களின் நிதிச்சுமையை சமாளிக்க அப்பாவி மக்களின் தலையில் நோய்ச்சுமையை ஏற்றிவைக்கும் விபரீதத்தில் போய் முடிந்துவிடும். எனவே வீண் பிடிவாதம் பிடிக்காமல் தமிழகத்தில் நாளை மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தனது திறனில்லாத நிர்வாகத்தால் கரோனா நோய் பரப்பும் இடமாக கோயம்பேடு சந்தையை மாற்றிய பழனிசாமி அரசு, அடுத்ததாக மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. இதற்காக உளவியல் ரீதியாக அனைவரையும் தயார்ப்படுத்துவதற்காக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெளிப்படையான எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கடந்த இரண்டு நாட்களாக மக்களை எளிதாக நடமாட அனுமதித்து வருகிறார்கள்.
அதாவது மதுக்கடை திறந்த பிறகு மக்களை வெளியில் விட்டதாக தெரியக்கூடாது என்பதற்காக இத்தகைய மோசமான நாடகத்தை பழனிசாமி அரசு அரங்கேற்றி வருகிறது. இதன்மூலம் தலைநகர் சென்னைக்கு நிகராக மற்ற ஊர்களிலும் சமமாக கரோனாவை பரப்புவதற்கான ஏற்பாடுகளை அரசே செய்துவருகிறதோ என்ற பயம் மக்களிடம் உருவாகி இருக்கிறது. மேலும் டீக்கடைகளை கூடத் திறக்கக்கூடாது என்பவர்கள் மதுக்கடைகளை திறக்கத் துடிப்பதன் மூலம், 43 நாட்கள் மக்களால் குடிக்காமல் இருக்க முடிந்தாலும், அரசாங்கத்தால் மதுக்கடைகளை திறக்காமல் இருக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்திருப்பதால் தமிழகத்தின் எல்லையோர மாவட்ட மக்கள் அங்கே சென்று மதுவை வாங்குகிறார்கள் என்று பழனிசாமி அரசின் சில அமைச்சர்கள் தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்தி வருகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கடும் பாதுகாப்பை மீறி மக்கள் எல்லை தாண்டி போக முடியுமா? அல்லது அவர்களை அரசே எல்லை தாண்ட அனுமதித்து தங்களின் மதுக்கடை திறப்பு முடிவுக்கு ஒரு காரணமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறதா?
சென்னை மாநகர காவல் எல்லையை தவிர்த்து அதன் சுற்றுப்புறங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறக்க பழனிசாமி அரசு முடிவு செய்திருக்கிறது. அவர்களின் வாதப்படி மாநில எல்லையையே தாண்டிச்சென்று மதுவை வாங்கமுடிந்தவர்களுக்கு, சென்னைக்கு அருகிலுள்ள மாவட்ட எல்லைகளை தாண்டிச்சென்று சென்னைவாசிகள் மதுவை வாங்க முடியாதா? அப்படி வாங்கினால் அதையும் திட்டமிட்டே அனுமதித்து பழனிசாமி அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?
இதன் பின்னணியில், முற்றிப்போன குடிநோயாளியைவிட மோசமான நிலையில் தமிழக அரசு எந்திரம் தடுமாறுகிறதோ? என்ற கேள்வியும் எழுகிறது. நோயை தடுக்கமுடியாமல் ஊரடங்கை செயல்படுத்தியவர்கள், இப்போது ஏழை, எளியவர்களின் பசிக்கு உணவளிக்க முடியாமல் அந்த ஊரடங்கையே சீர்குலைக்கும் விதமாக மதுவை கொடுத்து மக்களை திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தாய்மார்கள் எனப் பலரும் விடுத்துவரும் உருக்கமான வேண்டுகோள்களை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால், 'மக்கள் பாதிக்கப்படுவதை பற்றி கவலைப்படாமல் பிடில் வாசிக்கும் 21 ஆம் நூற்றாண்டின் நீரோ மன்னனாக' தமிழக ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மே மாத மத்தியில்தான் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ள நிலையில், இப்போது மதுக்கடைகளை திறந்து இவர்களின் நிதிச்சுமையை மக்களின் தலையில் நோய்ச்சுமையாக இறக்குவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகளை திறக்கும் ஆட்சியாளர்கள், அதற்குப்பதிலாக, இன்னொரு பக்கம் தங்களின் சுயலாபத்திற்காக தேவையற்ற இடங்களில் ஒப்பந்தம் என்ற பெயரில் சத்தமில்லாமல் வாரி இறைத்து வரும் பல நூறு கோடிகளை மிச்சப்படுத்துவதை பற்றி யோசிக்கலாமே! எனவே, மக்களின் உயிரோடு விளையாடாமல் டாஸ்மாக் மதுக்கடைகளை நாளை திறக்கும் முடிவை பழனிசாமி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.