தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (மார்ச் 12) ஒரே கட்டமாக வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய சொந்த மண்ணான எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன், அங்கிருந்தே பரப்புரையையும் ஏற்கனவே தொடங்கி விட்டார்.
எடப்பாடி பழனிசாமியை, சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும் என ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால், அத்தொகுதியில் எடப்பாடிக்கு எதிராக திமுக சார்பில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அச்சமூகத்தைச் சேர்ந்தவருக்கு சீட் வழங்கப்படும் என்றும் பல தரப்பிலும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில்தான், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சம்பத்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். பட்டதாரி இளைஞரான சம்பத்குமார் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளராக இருக்கிறார்.
எனினும், தொகுதியில் பெரிய அளவில் மக்களிடமோ, கட்சிக்காரர்களிடமோ அறிமுகம் இல்லாதவர் என்பதோடு, எடப்பாடி பழனிசாமியின் பெரும் பண பலத்துடன் மோதக்கூடிய அளவுக்கு வசதியானவரும் இல்லை என்கிறார்கள் உடன்பிறப்புகள். அவரை வேட்பாளராக அறிவித்த நிமிடம் முதலே எடப்பாடி தொகுதியில் திமுகவினர் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளனர்.
இது தொடர்பாக திமுக உடன்பிறப்புகள் சிலர் நம்மிடம் பேசினர்.
''வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சம்பத்குமார், முன்பு எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் ஆதரவாளராக இருந்தார். அதன்பிறகு, டி.எம்.செல்வகணபதியின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார். அவருடைய பரிந்துரையின்பேரில்தான் சம்பத்குமார் வேட்பாளர் ஆகியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே சம்பத்குமாருக்கு, அவருடைய நண்பரான 'இரிடியம்' ராஜ்குமார் என்பவர்தான் பண உதவிகள் செய்து வந்தார். இருவரும் அந்தளவுக்கு நெருக்கமான நண்பர்கள். தற்போது ‘இரிடியம்’ ராஜ்குமார், அதிமுகவில் இணைந்துவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்கத் தலைவராக இல்லாமல் போனாலும் கூட, ஒரு முதல்வர் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிடக்கூடிய நிலையில், வலுவான ஒருவரை வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம். வேட்பாளர் தேர்வில் திமுக தலைமை இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
பெரிய அளவில் பொருளாதார வசதியோ, மக்களிடம் அறிமுகமோ இல்லாத ஒருவரை நிறுத்தியது வருத்தம் அளிக்கிறது. என்றாலும், கட்சித் தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரை வெற்றிபெறச் செய்ய வைப்பதே எங்களின் கடமை,'' என்கிறார்கள் மூத்த உடன்பிறப்புகள்.
சம்பத்குமார் மீது திமுகவினர் வேறு ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
''குற்றப்பின்னணி இல்லாத நபர்களுக்குதான் இந்தமுறை திமுக வாய்ப்பு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது பலர், பழைய பணத்தைக் கமிஷன் அடிப்படையில் புதிய பணமாக மாற்றிக்கொடுக்கும் வேலையைச் செய்தனர்.
இப்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சம்பத்குமார், அப்போது நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பிஸினஸ் மேனிடம் பழைய பணம் 40 லட்சத்தை புதிய பணமாக மாற்றித் தருவதாகக் கூறி, ஒரு மாந்தோப்புக்கு வரவழைத்தார். அங்கு பணத்துடன் வந்த அவரை தாக்கிவிட்டு, பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து அந்த பிஸினஸ் மேன், ஆளுங்கட்சி விஐபி ஒருவர் மூலமாக சங்ககிரி போலீசில் புகார் செய்ய, சம்பத்குமாரை தூக்கிச்சென்று அடித்து உதைத்து விசாரித்தனர்.
இதையறிந்த திமுக புள்ளி ஒருவர், போலீசாரிடம் சமாதானமாக பேசி, அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் வெளியே கொண்டு வந்தார். பிஸினஸ்மேனிடம் பறித்த 40 லட்சத்தை இரண்டு தவணையாக கொடுப்பதாகவும் சம்பத்குமாரிடம் எழுதி வாங்கியதை அடுத்து அவர் மீது அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,'' என்கிறார்கள் திமுகவினர்.
''எடப்பாடி பழனிசாமி மீது தொழில் ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்ரமணியம் அல்லது மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ள பூலாம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகன் அழகுதுரை அல்லது கடந்த முறை போட்டியிட்ட முருகேசன் என இவர்களில் ஒருவருக்கு சீட் கொடுத்திருக்கலாம். 2006இல் திமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமியை தோற்கடித்த காவேரிக்கு கூட மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கலாம். ஏனோ அவர்களை எல்லாம் திமுக தலைமை கன்சிடர் பண்ணவே இல்லை,'' என்றும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள் சிலர்.
''எந்த ஒரு தொகுதியிலும் யாரை நிறுத்தினாலும் அவர்கள் மீது ஏதோ சில குற்றம் குறைகள், அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஆனால், தளபதி சொன்னதுபோல எல்லா தொகுதியிலும் கலைஞரே போட்டியிடுகிறார் என்ற நினைப்பில் வேலை செய்வதுதான் உண்மையான திமுக தொண்டனுக்கு அழகு,'' என்றும் கட்சியினர் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சம்பத்குமாரிடம் விளக்கம் பெறுவதற்காக அவரை வெள்ளியன்று நள்ளிரவு வரை 20 முறை தொடர்பு கொண்டோம். உதவியாளர்களிடமும் தகவலைச் சொன்னதோடு, மெசேஜ் மூலமும் தகவலை தெரிவித்தோம். ஏனோ அவர் பேசவில்லை. அவர் எப்போது விளக்கம் அளித்தாலும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.
பெருந்தலைவர் காமராஜரை தோற்கடித்த சீனிவாசன், பர்கூரில் ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம் வரிசையில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திய சம்பத்குமார் என மீண்டும் ஒரு புதிய வரலாறு படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. வரலாறு திரும்புமா என்பதை அறிந்துகொள்ள சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பொறுத்திருப்போம்.