தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நாக்பூர் சென்றிருந்தார். அப்போது அங்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியை அவரது வீட்டில் சந்தித்தார். இதுகுறித்து அவர் தெரிவித்தபோது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
நாக்பூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், “சாவர்க்கர் பல முற்போக்கான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். நான் முன்பு கூறியது போல் சாவர்க்கரின் முற்போக்கு பக்கத்தை நாம் பார்க்க வேண்டும். நான் கூட விமர்சித்து இருக்கிறேன். ஆனால் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. அவரது இந்து மகா சபாவை பற்றி விமர்சித்து உள்ளேன். இன்று அவர் இங்கு இல்லை. எனவே இங்கு இல்லாதவர்கள் பற்றி எந்த தலைப்பையும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. சாவர்க்கர் விவகாரம் தேசிய பிரச்சனை கிடையாது.
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு விவகாரம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் கடந்த காலங்களில் தலைவர்கள் அரசாங்கத்தை விமர்சித்துள்ளனர். இப்போதுதான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்றன” என்று தெரிவித்தார்.