Skip to main content

‘முன் களப்பணியாளர்கள் பட்டியலில் இவர்களையும் சேர்க்க வேண்டும்’ - விஜயகாந்த்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

"Tamil Nadu government cheating workers" - Vijaykanth

 

முன் களப்பணியாளர்கள் பட்டியலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குபவர்களையும் இணைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கும் பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். நீர்த்தேக்க தொட்டியைப் பராமரிப்பவர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்பட்டு இருந்தால் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மனிதக் கழிவு நீர்த்தேக்கத் தொட்டியில் கலக்கப்பட்ட சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்காது. மதுப்பிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிய தமிழக அரசு, மக்கள் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏன்?. 

 

தொழிலாளர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுநேரப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு பென்ஷன் மற்றும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 1992 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையை கணக்கிட்டு உடனே வழங்கிட வேண்டும். 

 

முன் களப்பணியாளர்கள் பட்டியலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இயக்குபவர்களையும் இணைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையை அவர்களுக்கும் வழங்க வேண்டும். அனைவருக்கும் பிஎஃப், இஎஸ்ஐ திட்டத்தை செயல்படுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் அனைவருக்கும் கையுறை, காலணிகள், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்