நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாண்டு நிறைவு விழா திருவாரூரில் நடந்தது. அப்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது...
ஏன் திருவாரூரை தேர்ந்தெடுத்தீர்கள் அதுவும் முதலாண்டு நிறைவு விழாவை... ஏன் கொஞ்சம் இறங்கி அடிக்கிறாரு கமல்ஹாசன் அப்படினு பல பத்திரிகைகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இறங்கி இல்லைங்க மேடை ஏறிதான் அடிக்கிறேன். சரி ஏன் திருவாரூர்... திருவாரூர் பல பெரும் கலைஞர்களை கொடுத்திருக்கிறது தமிழகத்திற்கு, பல நல்ல தலைவர்களை கொடுத்திருக்கிறது. ஆனால் ஒரு ஊர் என்றால் அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதுவும் கொடுத்திருக்கு. முக்கியமாக வாரிசு அரசியல், குடும்ப அரசியலை கொடுத்து, கெடுத்திருக்கிறது, தமிழகத்தை. அதனால் திருவாரூர் என் மனதில் மையம் கொள்கிறது. இதை மாற்றவேண்டுமென்று தமிழக மக்களுக்கு இருக்கும் திண்ணமான எண்ணம்போல் என் மனதிலும் இருப்பதால், திருவாரூரை தேர்ந்தெடுத்தேன். என்னங்க இப்படி சொல்லிட்டிங்க உங்களுக்கும்தானே குடும்பம் இருக்கு நீங்கள் இப்படி பேசலாமா அப்படினு கேட்டால், இருக்கு எனக்கும் குடும்பம் இருக்கு. என் குடும்பத்துல எட்டு கோடி பேர்.
அப்படி சொல்ல முடியாதுங்க, எங்கள் கட்சியிலும் ஒருத்தர் குடும்ப அரசியல், வாரிசு அரசியல்லாம் செஞ்சிட்டுதானே போனாரு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்படினு சொல்லுவாங்க. சரி, ஒத்துக்குறேன். ஆனால் அவர் போட்ட இலையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எல்லோரும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுவும் இரண்டு இலையை இரண்டா பிரிச்சு, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவேற இதுவேற. மக்களுக்கு எப்படி குழப்பம் இல்லையோ, அதுபோல எனக்கும் குழப்பம் இல்லை.