இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வர இருக்கிறது, அதனால் தான் பழனிச்சாமி கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை என்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் தஞ்சாவூரில் நடைபெற்ற பல்வேறு திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்..
சினிமாவில் தான் நடிகர்கள் நடிப்பார்கள் வாழ்கையிலேயே நடிப்பவர் அமைச்சர் உதயகுமார் தான். அதிலும் காமொடி நடிகராக இருக்கிறார். ஜெ., சமாதியில் மொட்டை அடித்து கொண்டு பொது செயலாளர் சசிகலா தான் முதல்வராக வேண்டும் என அம்மா பேரவை சார்பாக தீர்மானம் போட்டார். இந்த தகவல் அறிந்து அப்படியெல்லாம் செய்யக்கூடாது என சசிகலா கண்டித்தார் ஆனால் சின்னம்மா தான் முதல்வர் ஆகனும் என்றார்.
இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வர இருக்கிறது. அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமி கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிட்டு கொண்டிருக்கிறார். அவர் ஊரில் கும்பாபிஷேகத்திற்கு சென்று சாமி கும்பிட்டால் கூட அங்கு உள்ள கடவுள் தமிழக மக்களின் நலனை தான் பார்ப்பார். தனி நபர் வேண்டுதலை அதுவும் துரோகம் செய்த மக்கள் விரோத ஆட்சி நடத்தி கொண்டிருப்பவருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்.
இறைவன் தவறானவர்களுக்கும் அரக்க குணம் கொண்டவர்களுக்கும் அழிவை உருவாக்குவார். 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கின் தீர்ப்பு நல்லவிதமாக வரும் அதன் பிறகு நடக்கும் ஓட்டெடுப்பில் இந்த ஆட்சி முடிவிற்கு வரும். அந்த தீர்ப்பும் நல்ல தீர்ப்பாக தமிழக மக்களைக் காக்கும் தீர்ப்பாக இருக்கும்.
ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியை போலவே திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தலில் குக்கர் சின்னம் வெற்றி பெறும். ஆறு குளங்களை துார் வாருவதற்கு 400 கோடி ஒதுக்கினார்கள் அந்த பணம் தண்ணீரோடு போய் விட்டதா என தெரியவில்லை. ஊழல் செய்வதற்காகவே கொண்டுவரபட்ட திட்டம் தான் தூர்வாரும் திட்டம் இதிலும் கொள்ளையடித்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள் பேசுகிறார் என்றார்.
இந்த நிலையில் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களை குறிவைத்து தினகரனின் அ.ம.மு.க நலத்திட்டங்கள், கட்சி பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். விரைவில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டு காவல் துறையிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்குமா? என்பது சந்தேகமான நிலையில் அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறவும் தயாராக உள்ளனர்.