சட்டசபையை ஒத்திவைக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனோ வைரஸ் பீதி காரணமாக உலகமே ஆடிப் போயிருக்கிறது. நமது நாட்டில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து முடக்கப்பட்டு, மாநில எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன.
அரசு எடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பாராபட்சமின்றி ஏற்று, அதனை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.
இந்நிலையில் மத்திய அரசு நாடு முழுக்க முன் எச்சரிக்கையாக, 77 மாவட்டங்களை கண்டறிந்து , அங்கு எல்லைகளை மூடி, ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தமிழக மாவட்டங்களும் வருகிறது.
இந்திலையில் தமிழக சட்டமன்றம் மட்டும் தொடர்ந்து நடைபெறும் என்பது நியாயமற்றதாகும். குளிரூட்டப்பட்ட அறையில் கூடக் கூடாது, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் அமர வேண்டும், தேவையற்ற பயணங்கள் மற்றும் குழு சந்திப்புகளை தவிர்க்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டல்களை வழங்கி விட்டு, அது நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடருக்கு பொருந்தாது என்பது எந்த வகையில் நியாயம்?
இதனால் பல MLA க்கள் கவலையடைந்துள்ளனர். அவர்கள் இத்தருணத்தில் தொகுதியில் இருந்து அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டிய கடமையும் உண்டு.
எனவே அசாதாரண சூழலை கவனத்தில் கொண்டு, அனைவரின் நலனையும் எண்ணிப் பார்த்து, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.