தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேலும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக ஆட்சி நீடிக்குமா என்பது இடைத்தேர்தலின் முடிவுகளில்தான் தெரிய வரும். இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் அதிமுக அரசுக்கு சாதகமாக இல்லை என்ற தகவல் அதிமுகவின் தலைமையை டென்சன் ஆக்கியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைச்செல்வன், இரத்தினசபாபதி ஆகியோர் தினகரன் கட்சியில் பொறுப்பில் உள்ளனர் என்றும், அவருடன் இணைந்து செயல்படுவதற்கான புகைப்படங்கள் உள்ளது என்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். இது அவர்கள் 3 பேரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான முதல் படி என்று கூறுகின்றனர்.
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லும் அதிமுக தலைமை, அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்று திமுக ஆதரவாக பேசிய கருணாஸ், திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரம் செய்த தமிமுன் அன்சாரி, பாஜகவை எதிர்த்து பேசி வரும் தனியரசு ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைக்க மேலும் உறுப்பினர்கள் தேவைப்பட்டால், சுயேட்சையாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்றால் அவர்களை இழுக்கவும், கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோரை சமாதானப்படுத்தவும் அதிமுக தலைமை தயாராகி வருகிறது. தேவைப்பட்டால் அவர்களுக்கு அமைச்சர் பதவியையும் தர முடிவு செய்துள்ளதாம்.
22 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், திமுக ஆட்சி அமைந்தே தீரும் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். ஒருவேளை திமுக ஆட்சி அமைக்க போதிய உறுப்பினர்கள் இல்லாமல் போனால், சுயேச்சை வேட்பாளர்களோ, போட்டியிடும் வேறு கட்சியோ வெற்றி பெற்றால் அவர்களை சமாதானப்படுத்தி தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்க உள்ளார்களாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் 35 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும், குறைந்தது 5 கேபினெட் அமைச்சர்களை திமுக பெற்றுவிடலாம் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியோ, திமுக கேட்கும் கேபினெட் எண்ணிக்கை வேண்டுமென்றால், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என்று கூறி வருகிறதாம்.